டெல்லி:
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை அந்நாட்டின் அரசு வெளியேற்றியதால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்திருந்தது. இந்நிலையில், மாலத்தீவுக்கு இந்தியா பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுத்திருக்கிறது.
நேற்று டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மாலத்தீவின் பாதுகாப்பு துறை அமைச்சர் முகமது கசான் மௌமூன் ஆகியோர் சந்திருந்தனர். இந்தச் சந்திப்பை அடுத்து இனி வரும் காலங்களில் இரு நாட்டு உறவைப் பலப்படுத்துவது என்று பேசப்பட்டிருக்கிறது.
பஞ்சாயத்து செய்த மாலத்தீவு அதிபர்:
சென்னையிலிருந்து மதுரை செல்லும் தூரம்தான், கன்னியாகுமரிக்கும் மாலதீவுக்கும் இடையேயான தொலைவு. புறநகர் சென்னையில் வசிக்கும் மக்களைவிடக் குறைந்த அளவில்தான் மாலத்தீவில் மக்கள் வசிக்கின்றனர்.
இப்படி மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் ரொம்ப குட்டியாக உள்ள மாலத்தீவுக்கு இந்தியா தன்னால் முடிந்த அளவுக்குச் சப்போர்ட் செய்து வந்தது. ஆனால், அந்நாட்டின் புதிய அதிபராகத் தேர்வான முகமது முய்ஸு, இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைப் பின்பற்றத் தொடங்கினார். இங்குதான் பிரச்சனை வெடித்தது.
அதாவது மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்று முய்ஸு உத்தரவிட்டார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளானது.
இந்தியா இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தாலும், அதை ஏற்காத முய்ஸு, ராணுவ வீரர்களை நிச்சயம் வெளியேற்றப்பட வேண்டும் என்று முழங்கினார்.
சீனாவுடன் நெருக்கம்:
இந்தியாவிடம் இப்படி பில்டப் காட்டிவிட்டு, மறுபுறம் சீனாவுடன் முய்ஸு நெருக்கம் காட்ட தொடங்கினார். அதிபராகத் தேர்ந்தெடுக்கபட்ட உடன் அவரது முதல் வெளிநாட்டு பயணம் சீனாவுக்குதான் இருந்தது.
சீனாவை சுற்றிய அவர், அங்குள்ள சில முக்கிய அம்சங்களை மாலதீவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், சீனாவின் ஆய்வுக்கும், அந்நாட்டு கப்பல் நின்று செல்வதற்கும் தாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம் என்று கூறியும் அந்நாட்டுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தார்.
இந்தியாவுக்கு பணிந்த முய்ஸு:
ஏற்கெனவே இலங்கை சீனா ஆதரவு நிலைப்பாட்டுடன்தான் இருக்கிறது. அதேபோல, பாகிஸ்தானும் சீனா பக்கம்தான். இப்படி இருக்கையில் மாலத்தீவும் கையை விட்டுப் போய்விட்டால் பூகோள அரசியலில் நமக்குப் பின்னடைவு ஏற்படும் என்பதை உணர்ந்த இந்தியா, தன்னுடைய முழு பலத்தை காட்ட தொடங்கியது.
இதனையடுத்து முய்ஸு வழிக்கு வந்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, மூன்றாவது முறையாக மோடி பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் முய்ஸுவுக்கு முன்னணி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் நட்புக் கரம்:
இப்படியாக இந்தியாவிடம் முய்ஸு மீண்டும் பழைய நட்பு பாதைக்குத் திரும்பிய நிலையில், இந்தியா தன்னால் முடிந்த சில உதவிகளைச் செய்ய முன்வைத்திருக்கிறது. அதன்படி பாதுகாப்பு உபகரணங்களை மத்திய அரசு மாலத்தீவுக்கு வழங்கியிருக்கிறது. நேற்று டெல்லியில் ராஜ்நாத் சிங் மற்றும் முகமது கசான் மௌமூன் சந்தித்து பேசிய நிலையில், இந்தியா தனது உதவியை வழங்கியுள்ளது.
மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்ட பிறகு இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்துக்கொள்வது இதுதான் முதல்முறை.
அதேபோல இனி வரும் நாட்களில் இரு நாடுகளும் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகக் கூறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.