சென்னை:
பெரியார்குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவான ஆதாரத்தைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெரியார் எந்தப் புத்தகத்தில் அப்படியொரு கருத்தைக் கூறியுள்ளார் என்பதை வெளியிடுவேன் என்று கூறிய அவர், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்திற்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை நேற்று அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகச் சட்டப்படி நியாயமாகப் பெற்று தரக்கூடிய செயலைத் தவிர்த்து, அரசுக்கு வேறு எந்த எண்ணமும் கிடையாது.
முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்து, யார் அந்தச் சார் என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கான ஆதாரம் எதிர்க்கட்சிகளிடம் இருந்தால், சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளிக்கலாம்.
அதேபோல் மாணவி வன்கொடுமை வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர், திமுக உறுப்பினர் அல்ல. அவர் ஒரு திமுக ஆதரவாளர் தான். அதனை நாங்கள் மறுக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், கடந்த 15 நாட்களாக அமைச்சர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். திமுகவின் 2ஆம் கட்ட தலைவர்கள், ஞானசேகரன் யார் என்றே தெரியாது. அவர் திமுகவில் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
ஆனால் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் அனுதாபி என்று ஒரு வார்த்தையைக் கூறியுள்ளார். இதனால் முதல்வரின் இந்தச் செயல்பாடு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க இறங்கி இருப்பதாகப் பார்க்கிறேன்.
திரும்பத் திரும்பக் கேட்பது என்னவென்றால், காவல் ஆணையர், அமைச்சர் ரகுபதி மற்றும் முதல்வர் என்று அனைவரும் முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறார்கள் என்பது தான் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசு அங்குச் சுரங்கத்திற்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில், அது மாநில அரசின் பொறுப்பில் உள்ளது.
அதனால் மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு நிர்பந்திக்க போவதில்லை என்றும் தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்.
முதலமைச்சர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்காததால் தான் மதுரையில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் பேரணியை பார்க்கிறோம். அவர் மூத்த அமைச்சர் ஒருவரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும்.
அப்படி செய்யாததன் விளைவு பேரணி நடந்துள்ளது. இனியாவது முதல்வர் இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ந்து பெரியார்குறித்து சீமான் கூறிய சர்ச்சை கருத்துகுறித்த கேள்விக்கு, பெரியார் எங்கே அப்படியொரு கருத்தைக் கூறியுள்ளார்… எந்தப் புத்தகத்தில் கூறினார் என்ற ஆதாரத்தை நான் வழங்குகிறேன்.
பெரியார் பேசிய பல விஷயங்களை இன்று பேசினால், மக்களிடையே அருவறுப்பு வந்துவிடும். சீமான் அண்ணனைத் தேடி போலீஸ் வந்தால், அந்த ஆதாரத்தைக் கொடுத்தால் போதும் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளார்.