சர்ச்சைக்குரிய வகையில் பேசிக் கைதாகி இருக்கும் மகாவிஷ்ணுவை காவலில் எடுத்துள்ள போலீசார், அவரை நேற்று இரவு 11.30 மணி அளவில் அழைத்துக் கொண்டு திருப்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
இன்று காலையில் திருப்பூரை சென்றடைந்த போலீசார் முதலில் மகா விஷ்ணுவிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் திருப்பூர் குளத்து பாளையத்தில் உள்ள மகாவிஷ்ணுவின் பரம்பொருள் ‘பவுண்டேசன்’ அமைப்பின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
காலை 10.30 மணி அளவில் அலுவலகத்துக்குள் சென்ற போலீசார் கதவை மணிக்கணக்கில் பூட்டிக்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த போலீசார் அதில் இடம்பெற்றுள்ள தகவல்களைத் திரட்டியுள்ளனர். மகாவிஷ்ணுவின் வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பரம்பொருள் பவுண்டேஷனுக்குக்கு யார்-யாரெல்லாம் பணம் அனுப்பியுள்ளனர்? சட்ட விரோதமாகப் பண பரிமாற்றங்கள் எதுவும் நடைபெற்று உள்ளதா? என்பது பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டியுள்ளனர்.
முன்னணி தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தனது பேச்சுத் திறமையை வெளிக்காட்டிய மகாவிஷ்ணு அதனை வைத்தே பிரபலமாக முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பை நிறுவி வெள்ளை உடைக்கு மாறி இருக்கிறார். பின்னர் குறுந்தாடியை வைத்துக்கொண்டு சொற்பொழிவாற்ற தொடங்கினார்.
இப்படித்தான் மகாவிஷ்ணுவின் சொற்பொழிவுப் பயணம் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மகாவிஷ்ணு சொற்பொழிவாளராக மாறியது எப்படி? அவரது பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பது பற்றிய விசாரணையையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவில் யார் மூலமாகக் கலந்து கொண்டீர்கள்? அதற்கு யார் யாரையெல்லாம் சந்தித்தீர்கள்? என்பது போன்ற விவரங்களையெல்லாம் கேட்டுப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மகா விஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையிலிருந்து ஹார்ட் டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.