
புதுடில்லி: ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கச் செபி தலைவர் மாதபி புரி பூச் இன்று (அக்.,24) பார்லி பொது கணக்குக் குழு முன்பாக ஆஜராகவில்லை. இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
‘அதானி’ குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான ‘செபி’ அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அண்மையில் குற்றச்சாட்டு கூறியது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மாதவி மறுப்பு தெரிவித்தார்.
அதானி குழுமம் தொடர்பான முறைகேடு விசாரணையில் மாதவி ஒருதலைபட்சமாகச் செயல்பட்டதாக, எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி இருந்தன. இந்த விவகாரத்தில் காங். எம்.பி., தலைமையிலான பார்லிமென்ட் பொது கணக்குக் குழு, மாதவி புரி புச் இன்று (அக்.24) ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனச் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அவர் இன்று விசாரணைக்கு ஆஜர் ஆகவில்லை.
அவர் ஆஜராக முடியாது என்பதை, கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகத் தகவல் சொல்லி இருக்கிறார். இதுகுறித்து பார்லி., பொது கணக்குக் குழுத் தலைவர் வேணுகோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்று காலை 9.30 மணியளவில், செபி தலைவர் மற்றும் பிற உறுப்பினர்களிடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது.
அவர் தனிப்பட்ட அவசரநிலை காரணமாக டில்லிக்கு வர முடியாது என்ற தகவல் வந்தது. ஒரு பெண் விடுத்த கோரிக்கையைக் கருத்தில் கொண்டு, இன்றைய கூட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்தோம். மற்றொரு கூட்டம் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


