மாவீரன் படத்துக்கு தெலுங்கில் நடிகர் ரவிதேஜா! தமிழில் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ள நிலையில், அவர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், மாவீரன். இப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு மாவீருடு என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்துக்கு மண்டேலா படத்துக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான சீன் ஆ.. சீன்..ஆ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இரண்டாவது சிங்கிள் பாடலான வண்ணாரபேட்டையில பாடலை அதிதியும், சிவகார்த்திகேயனும் இணைந்து பாடியிருந்தனர்.
இந்நிலையில், மாவீரன் படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி,தெலுங்கில் நடிகர் ரவிதேஜா பின்னணி குரல் கொடுத்துள்னர் . இதனைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் சிவகார்த்தியேன் தனது ட்விட்டர் பக்கத்தில், நன்றி விஜய் சேதுபதி. மாவீரனில் உங்கள் குரலோடு இணைவதில் மிக்க மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார். படத்தின் தொடக்கத்தில் கதையை விவரிக்கும் காட்சியில் விஜய் சேதுபதியின் பின்னணி குரல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.