ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது.
ஆடி மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும். 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ் ரகலசாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகியவை நடைபெறும். 21-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
ஆடி மாத பூஜையையொட்டி பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சபரிமலைக்கு வரும் ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம் திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கேரள அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி மாலையில் திறக்கப்படும். 10-ந்தேதி நிறை புத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.