
30 குண்டுகள் முழுங்க எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் தகனம்!
சென்னை: மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்குக் காவல்துறை மரியாதையுடன் 30 குண்டுகள் முழுங்கக் காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது.
பிரபல வேளாண் விஞ்ஞானியும், இந்திய ‘பசுமைப் புரட்சி’யின் சிற்பியுமான எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாகக் கடந்த வியாழக்கிழமை காலை 11.20 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 98.
பசுமை புரட்சியின் தந்தை எனவும் எம்.எஸ். சுவாமிநாதன் அழைக்கப்பட்ட இவர் அதிக விளைச்சல் தரும் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தி, நெல் உற்பத்தியைப் பெருக்க வழிவகை செய்தவராவார். ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் மகசேசே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றார்.
வயது மூப்பு காரணமாக எம்.எஸ். சுவாமிநாதன் உயிரிழந்ததற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதையடுத்து “உலகம் போற்றும் விஞ்ஞானியாகச் சுற்றுச்சூழல் வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதனை கௌரவிக்கும் விதமாக அவருக்குக் காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டார்.
இந்நிலையில் 30 குண்டுகள் முழுங்க எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் காவல்துறை மரியாதையுடன் இன்று செய்யப்பட்டு சென்னை பெசன்ட்நகர் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.



