
சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்துக் கள்ளச்சந்தையில் விற்பதைத் தடுக்கும் வகையில் நாளை முதல் டெலிவரி ஓடிபி கட்டாயம் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஈரான் அமெரிக்கா இடையான போரால் ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் எரிவாயு ஏற்றி வருவது தடைபட்டுள்ள நிலையில் எரிவாயு வழங்கலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனினும் வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மத்திய அரசு கவனமாக உள்ளது. ஏற்கெனவே ஒரு சிலிண்டர் வாங்கியவர் இன்னொரு சிலிண்டர் வாங்குவதற்கான கால இடைவெளியை அதிகரித்துள்ளது. அதேபோல் சிலிண்டர் புக்செய்தவர்களே அதைப் பெறுவதை உறுதி செய்ய டெலிவரி ஓடிபி பெறும் முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. ஆனாலும் இதைக் கட்டாயம் ஆக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்துக் கள்ளச்சந்தையில் விற்பதைத் தடுக்க நாளை முதல் டெலிவரி ஓடிபி பெறுவதைக் கட்டாயம் ஆக்க எண்ணெய் நிறுவனங்களும், எரிவாயு முகமைகளும் முடிவு செய்துள்ளன.
இதன்படி சிலிண்டர் முன்பதிவு செய்யும்போது வாடிக்கையாளருக்கு ஒரு ஓடிபி எண் வரும். அந்த எண்ணைப் பகிர்ந்தால் மட்டுமே இனி எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
இதனால் கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பது கட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..



