
திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம்மீது லாரி மோதிய விபத்தில் இளம் பெண் தலை நசுங்கி பலியானார், குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்றபோது பெண்மீது சவுடு மண் ஏற்றி வந்த லாரி மோதிப் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடம்பத்துார் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(35). ஸ்ரீபெரும்புதுார் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அஸ்வினி (28) என்ற மனைவியும் 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருந்தனர்.இந்நிலையில் இன்று 15-ஆம் தேதி மதியம் 3:30 மணியளவில் மேல்நல்லாத்துாரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையை அழைத்து வருவதற்கு அஸ்வினி வழக்கம்போல் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது பிஞ்சிவாக்கம் – தண்டலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் சவுடு மண் ஏற்றி வந்த லாரி மோதியதில் அஸ்வினி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடம்பத்துார் போலீசார் உடலைக் கைப்பற்றித் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்றபோது பெண்மீது சவுடு மண் ஏற்றி வந்த லாரி மோதிப் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

