
திருவள்ளூர் சிற்றம்பாக்கத்தில் சேது என்பவர் தனியார் தொழிற்சாலை ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மாலை நண்பருடன் வீட்டின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் நாட்டு வெடிபொருள் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால், சேது முகத்தை இரண்டு கைகளால் மூடிய போது வலது கையில் வெடிபொருள் பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சேதுவை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலறிந்து வந்த கடம்பத்துார் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று நடத்திய விசாரணையில் கடந்த மாதம் பேரம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் பார் மற்றும் பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பிரச்சனையையடுத்து நண்பர்களுடன் சேது சென்றுள்ளார்.
பின்னர், அங்கு அவரிடம் தகராறில் ஈடுபட்டு முகேஷ் என்பவரை சேது வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால், காரில் வந்த மர்மநபர்கள் சேது மீது நாட்டு வெடிபொருள் வீசி தப்பிச் சென்றுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, திருவள்ளூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தமிழரசி, தாலுகா ஆய்வாளர் வெற்றிச்செல்வன் மற்றும் கடம்பத்துார் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.



