
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் எம்.பி.யான வருண் காந்திக்கும், சுல்தான்பூர் எம்.பி.யான அவரது தாய் மேனகா காந்திக்கும் பாஜக மீண்டும் வாய்ப்பு வழங்காது எனத் தெரிகிறது.
வாய்ப்பு மறுக்கப்பட்டால் வருண் காந்தி காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராகக் களம் இறங்க வருண் காந்தி திட்டமிட்டு இருக்கிறார்.
இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா. அவரது மகன் வருண் காந்தி. காங்கிரஸின் ராகுலுக்கு எதிராகபாஜகவில் அதிரடியாகக் களம் இறக்கப்பட்டவர் வருண் காந்தி. நேரு-காந்தி குடும்பத்தின் மற்றொரு வாரிசான இவர் பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். 2014-ல்சுல்தான்பூர் எம்.பி.யான இவர், 2019-ல் பிலிபித் தொகுதிக்கு மாறி எம்.பி. ஆனார்.
2017 உ.பி. தேர்தலில் முதல்வர் வேட்பாளராவார் எனவும் பேசப்பட்டார்.
அங்கு யோகி ஆதித்யநாத் முதல்வரானது முதல் கட்சித் தலைமைமீது வருண் அதிருப்தி காட்டத் தொடங்கினார். 2022 உ.பி. தேர்தலுக்குப் பிறகு இந்த அதிருப்தி அதிகரித்தது. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி ஆட்சியை விமர்சனம் செய்து வந்தார்.
இதனால் 2024 மக்களவைத் தேர்தலில் வருணுக்கு கட்சி வாய்ப்புஅளிக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே பிலிபித்தில் வருணுக்கு பதிலாக உ.பி. அமைச்சர் ஜிதின் பிரசாத்திற்கு பாஜக வாய்ப்பு அளிக்க உள்ளது.
இதற்கிடையில் மேனகா மற்றும் வருண் ஆகிய இருவருக்கும் அதே தொகுதிகளில் அல்லது வேறு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் மேனகாவுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் வருணுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் மற்றொரு தகவலும் வெளியாகி இருக்கிறது. ஆனால் மகன் வருணுக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மேனகா வலியுறுத்தி வருகிறார்.
இதனிடையே, சில வருடங்களுக்கு முன், வருண் காங்கிரஸில் இணையவிருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால் வருணின் கொள்கைகள் வேறு என்று கூறி ராகுல் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் உ.பி. தலைவர்களில் ஒருவரான வருண், சமாஜ்வாதியில் இணைவதை தவிர வேறு வழியில்லாத நிலை உள்ளது. இது தொடர்பானகேள்விக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவுஎடுப்பதாகப் பதில் அளித்திருந்தார்.
பிறகு அமேதியில் வருண் சுயேச்சையாகப் போட்டியிடுவார் எனவும் இவருக்குச் சமாஜ்வாதியும், காங்கிரஸும் ஆதரவளிக்கும் எனவும் தகவல் பரவி வருகிறது.
வருணின் தாயான மேனகா காந்தி (67), உ.பி.யின் சுல்தான்பூர் எம்.பி.யாக உள்ளார். இவருக்கும்வரும் தேர்தலில் பாஜக வாய்ப்பு அளிக்காது எனத் தெரிகிறது. உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 55 தொகுதிகளுக்குப் பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வருண், மேனகா, மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்உள்ளிட்டோரின் தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


