
பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் நரேந்திரமோடிக்கு தைரியம் இருக்கிறதா என்று, பென்னாகரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணியின் மகன் பிரகதீஸ்வரன் – மது பிரதிக்சா ஆகியோரது திருமண விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணியின் மகன் பிரகதீஸ்வரன் – மது பிரதிக்சா ஆகியோரது திருமண விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அருமை சகோதரர் மணி – புவனேஸ்வரி தம்பதியரின் மகன் பிரகதீஸ்வரன், மற்றும் கோவிந்தன் – சுகுணா தம்பதியரின் அருமை மகள் மது பிரதிக்சா ஆகியோரது மணவிழாவிற்கு வருகை தந்து வாழ்த்தி, அமர்ந்திருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம் என்று தெரிவித்த அவர், ஆ.மணியின் இல்லத்தில் நடைபெறக்கூடிய திருமண விழாவில் கலந்து கொண்டு, மணவிழா நிகழ்ச்சியை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
அதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார். மேலும், யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை பரப்பினாலும், எவ்வளவு போலிச் செய்திகளை உருவாக்கினாலும், நான் தெளிவோடு சொல்கிறேன், 2026-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி நிச்சயம் அமையும். அன்றைக்கு அனைத்து சேனலிலும், திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தது என்ற செய்திதான் வரப்போகிறது என்றும், அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என்றும், தமிழ்நாட்டு மக்கள் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையின் காரணமாக இதை நான் தெளிவோடு சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்த அவர். பீகாரில் பேசியதை தமிழ்நாட்டில் பேச பிரதமர் நரேந்திரமோடிக்கு தைரியம் இருக்கிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.





