சென்னை: இதுவரை தமிழகம் முழுவதும் ரூ.33.31 கோடி ரொக்கம், ரூ.33 கோடி மதிப்பிலான தங்கம் உட்பட ரூ.69.70 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். தமிழகத்தில் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி, பெண் வாக்காளர்கள் 3.17 கோடி பேர் உள்ளனர்.
தேர்தலை ஒட்டிப் புதிதாக 177 போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் 68144 வாக்குசாவடிகள் அமைக்கப்ட உள்ளன. ஏப்ரல் 1ம் தேதி முதல் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணிக்காக 7 லட்சம் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளன.
இதுவரை தமிழகம் முழுவதும் ரூ.33.31 கோடி ரொக்கம், ரூ.33 கோடி மதிப்பிலான தங்கம் உட்பட ரூ.69.70 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வருமான வரித்துறை மூலம் ரூ.6.51 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.
தனியார் கட்டடங்களில் 1,16,342 சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம். 648 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. சி-விஜில் செயலி வாயிலாக அளிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
