
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லை மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த மனு மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், வாக்களர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்தும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அவரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.



