Lok Sabha Elections 2024: பழசை மறக்காத ஜி.கே.வாசன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!

ஜி.கே.வாசன், சைக்கிள் சின்னத்திற்கு பதிலாகக் கைச்சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்: பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாகக் களம் இறங்கி உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்துச் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் த.மா.கா. சார்பில் வேட்பாளர் வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வேணுகோபாலை ஆதரித்துத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் பிரசாரத்தில் ஈடுபட்டபோது சைக்கிள் சின்னத்திற்கு பதிலாகக் கைச்சின்னத்திற்கு வாக்கு கேட்டதால் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திறந்த ஜீப்பில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்ட ஜி.கே.வாசன், வேணுகோபாலுக்கு நீங்கள் எல்லாம் கைச்சின்னத்திலே… என்று சொல்லும்போது நிர்வாகி ஒருவர் குரல் எழுப்ப அதனைச் சமாளிக்கும் விதமாக வேட்பாளரைக் கையை நகர்த்துங்கள் என்று கூறி சமாளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *