Lok Sabha Elections 2024: பா.ம.க. வேட்பாளர்களில் 30 சதவீதம் பேர் மகளிர்… டாக்டர் ராமதாஸ் பெருமிதம்!

தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், 2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மகளிருக்கு அதிகாரம் வழங்குதல், இதுதான் சமூகநீதி.

தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. அதனால் தான் சொல்கிறோம் பாட்டாளி மக்கள் கட்சி தான் சமூகநீதிக்கட்சி என்று!

அதேபோல். பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சீபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. இது தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள தனித்தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தை விட அதிகம் ஆகும். இதுதான் பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குதல், இதுதான் சமூகநீதி.

இதற்கு முன் 1999-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டபோதே சிதம்பரம், ராசிபுரம் ஆகிய இரு தொகுதிகளை, அதாவது 28.70 சதவீதம் தொகுதிகளை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கிய வரலாறு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. இதுதான் நாங்கள் விரும்பும் சமூகநீதி! என்று தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *