
நீதிமன்றத்தில் புகார்; அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு.
புதுடெல்லி: டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவாலை கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர் தன்னை மோசமாக நடத்தியதாக நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் புகார் செய்தார்.
அதே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னை கௌரவமாக நடத்தியதாக பாராட்டு தெரிவித்தார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மத்திய அமலாக்க துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் பலத்த பாதுகாப்புடன் டெல்லி ரோஸ் அவனியூ நீதிமன்றத்தில் பிற்பகல் 2 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது நீதிபதி முன்பு தன்னை அழைத்து வந்த போது மோசமாக நடத்தியதாக டெல்லி உதவி போலீஸ் கமிஷனர் ஏ கே சிங் என்பவர் மீது கெஜ்ரிவால் புகார் செய்தார். அவரைப் பணி நீக்கம் செய்யும்படியும் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.
ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் மனீஸ் சிசோடியா இந்த வழக்கில் கைதான போதும் இதே போலீஸ் அதிகாரி அவரிடம் முரட்டுத்தனமாக நடந்ததாக புகார் செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.
பாராட்டு
அதே நேரத்தில் தன்னை கைது செய்ய வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தன்னிடம் கௌரவமாக நடந்து கொண்டதாக கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்தார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது இந்த தகவலை அவர் தெரிவித்தார்.
இது பற்றி அவர்,”அமலாக்கத்துறை அதிகாரிகள் என்னுடைய வீட்டுக்கு வந்த போது என்னுடைய பெற்றோருடன் நான் அமர்ந்திருந்தேன். ஆனால் என்னை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக என்னால் எனது பெற்றோரிடம் ஆசி வாங்க முடியாமல் போய்விட்டது.
ஆனால் அதிகாரிகள் என்னிடம் மரியாதையாக நடந்து கொண்டனர். தேவைப்பட்டால் டெல்லி அரசை சிறையில் இருந்து நடத்துவேன்” என்று குறிப்பிட்டார்.
டெல்லி மக்களுக்கு சேவை செய்வதற்காக தன்னை அர்ப்பணித்து இருப்பதாக உறுதி கூறிய அவர் தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கும் இக்கட்டான காலத்தில் ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

