Lok Sabha Election 2024: வாக்குக்குப் பணம், பொருட்கள், மது அளித்தால் கடும் நடவடிக்கை!

Advertisements

புதுடெல்லி: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் விஞ்யான் பவனில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவை தேர்தல் அட்டவணையை அறிவித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகள்: மிகுந்த உயர்ந்த தரத்தில் தேர்தல் நடத்தப்படும் என உறுதியளிக்கிறேன். தேர்தல் நேரத்தில் போலி செய்திகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரையில், ட்ரோன் மூலம் மாநில எல்லைகள், சில சர்வதேச எல்லைகளில் கண்காணிக்கப்பு மேற்கொள்ளப்படும். தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். ஹெலிகாப்டர்கள், தனி விமானங்களில் கூடத் தீவிர சோதனை நடத்தப்படும்.

தேர்தலில் ஆள் பலம், பணப் பலம், வதந்திகள், விதிமுறை மீறல்கள்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 24*7 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். வாக்குக்குப் பணம், பொருட்கள், மது அளித்தால் மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பணப் பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித் துறையினர், அமலாக்கத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். வங்கிகள் தங்கள் வாகனங்களில் மாலை 6 மணிக்கு மேல் பணம் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் தீவிரமாகக் கண்காணிப்படும். தேர்தல் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோதிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *