
அதிமுக ஆட்சிக்கு வந்தால் முதியோர் ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், குடும்பப் பெண்களுக்கான உதவித்தொகை இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் உத்திகள் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சிக்கு வந்தால், முதியோர் ஓய்வூதியம் இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று உறுதியளித்தார்.
மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும், அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு மூன்று எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறினார். ஊரக வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார்.



