Lok Sabha Election 2024: வரும் புதன்கிழமை தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

Advertisements

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது.

புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் விஞ்யான் பவனில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மக்களவை தேர்தல் அட்டவணையை அறிவித்தார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் இருந்தனர். நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

7 கட்டங்களாகத் தேர்தல்: ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது.

94 தொகுதிகளுக்கான 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது. 96 தொகுதிகளுக்கான 4 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது. 49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெறுகிறது. அதேபோல், 57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7 ஆம் கட்டம் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே ஒரே கட்ட தேர்தலுக்குக் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.

தமிழகம்: (ஒரே கட்டமாகத் தேர்தல்)

* வேட்புமனு தாக்கல் தொடக்கம்- மார்ச் 20
* வேட்புமனு தாக்கல் முடிவு- மார்ச் 27
* வேட்புமனு பரிசீலனை – மார்ச் 28
* வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
* வாக்குப்பதிவு- ஏப்ரல் 19

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *