Lok Sabha Election 2024: மோடி அலை இல்லை; பாஜக பெண் வேட்பாளர் கருத்தால் சர்ச்சை!

Advertisements

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்னீத் ரானா ‘மோடி அலை’ இல்லையெனப் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்தை வைத்து மகாராஷ்டிராவின் என்சிபி (சரத் பவார் பிரிவு), சிவ சேனா (யுபிடி) பிரிவுக் கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

கடந்த திங்கள் கிழமை அமராவதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமராவதி தொகுதி பாஜக வேட்பாளர் நவ்னீத் ரானா, “நாம் இத்தேர்தலை ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தல்போல் பாவித்துப் பணிகளைச் செய்ய வேண்டும். பகல் 12 மணிக்குள் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்துவிட வேண்டும். அவர்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். மோடி அலை இருக்கிறது என்ற மாயையில் இருந்துவிட வேண்டாம். மோடி அலை இருந்தும்கூட கடந்த முறை நான் சுயேச்சையாக வெற்றி பெற்றேன் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்” என்று பேசியிருந்தார். அவர் பேச்சு அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி மகாராஷ்டிரா அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள சரத் பவார் தலைமையிலான என்சிபி, உத்தவ் பால் தாக்கரே பிரிவு சிவ சேனா ஆகிய கட்சிகள், நவ்னீத் ரானா உண்மையைப் பேசியுள்ளார். எதிர்க்கட்சியினரை தங்கள் வசம் இழுக்கும் பாஜகவின் பிரயத்தனமே விரக்தியின் வெளிப்பாடு. அதுவே ரானாவின் கருத்துக்குச் சாட்சி என்று கருத்து தெரிவித்துள்ளன.

நவ்னீத் ரானா 2019 மக்களவைத் தேர்தலில் என்சிபி ஆதரவோடு சுயேச்சையாகக் களமிறங்கி வெற்றி பெற்றார். இந்த முறை அவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி வேட்பாளராகக் களம் காண்கிறார்.

நவ்னீத் ரானாவின் கருத்துகுறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபஸி, “ரானா பேசிய அனைத்துமே உண்மை. அது பாஜக எம்.பி.க்கள் அனைவருக்குமே தெரியும். பாஜகவுக்கு மோடி அலை என்று ஒன்றில்லை என்பது தெரியும். ஒவ்வொரு எதிர்க்கட்சியிலிருந்து யாரையாவது பிரித்து இழுத்துக் கூட்டிவரும் பாஜகவின் செயலே இதற்குச் சாட்சி. யார் மீது ஊழல் குற்றம் சுமத்தியதோ அவரைக் கூடத் தங்கள் கட்சிக்கு இறக்குமதி செய்துள்ளது பாஜக. அவர்களைக் கொண்டுதான் தேர்தலை வெல்ல முடியும் என்பதால் வேறு வழியே இல்லாமல் அவ்வாறு செய்துள்ளது” என்றது.

சிவசேனா உத்தவ் பால் தாக்கரே பிரிவு செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ரவுத், “மோடி அலையை மறந்துவிடுங்கள். மோடி அவரே அவருடைய தொகுதியில் வெற்றி பெறுவாரா என்பதே பெரிய கேள்விதான். பாஜக நாடு முழுவதுமே 45 தொகுதிகளில் தான் வெற்றி பெறும், மகா விகாஸ் அகாடி மகாராஷ்டிராவில் மட்டும் 48 சீட்கள் வெற்றி பெறும்” எனக் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *