Lok Sabha Election 2024: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்கு!

Advertisements

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்களிப்போம் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். சத்தியமங்கலத்தில் நீலகிரி வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகில் உள்ள எஸ்பிஎஸ் கார்னரில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, நீலகிரி தொகுதியில் அண்ணன் ஆ.ராசா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்தேன். உங்களைப் பார்த்தபோது இந்த முறை குறைந்தது 3 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி உறுதி.

எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும். கழகத்தில் பல அணிகளுள்ள நிலையில் அண்ணன் ஆ ராசாவை இளைஞரணிக்கு பொறுப்பாளராகப் போட வேண்டும் எனத் தலைவரிடம் நான் சொன்னேன். 2 ஜி பொய் வழக்கில் நீதிமன்றத்தில்  தனிமனிதனாக நின்று வாதாடி வெற்றி பெற்றவர் ஆ.ராசா. தாளவாடி மலைப்பகுதியில் 13 கோடி செலவில் அரசு கலைக்கல்லூரி,  ஒழுங்கு முறை விற்பனைக்கூடம், பவானிசாகர் அணை கட்ட காரணமாக இருந்த முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரனுக்கு மணி மண்டபம் வரக் காரணமாக இருந்தவர் ஆ.ராசா.

சமையல் கேஸ் விலையை ஏற்றிவிட்டு தேர்தல் நேரத்தில் 100 ரூபாய் குறைத்து வடை சுட்டுள்ளார்கள். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் விலை 65 ரூபாய்க்கும் சிலிண்டர் 500 ரூபாய்க்கும் விலை குறைக்கப்படும் எனத் தலைவர் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதியைக் கண்டிப்பாக நிறைவேற்றுவார். ஏனென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நமது முதலமைச்சர். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சிகள் மற்றும் பவானிசாகர் பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் ஆகிய நகரங்களுக்கு அகல ரயில்பாதை வழித்தடம் அமைக்கப்படும். தாளவாடி மலைப்பகுதிக்கு வனப்பகுதி வழியாகக் கர்நாடகத்திற்கு செல்லாமல் தமிழகம் வழியாகச் செல்லும் வகையில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொன்னதைச் செய்வார் நமது முதலமைச்சர்.

அதனால போடுங்க பட்டனை அழுத்தி  ஓட்டு. மோடிக்கு வைங்க வேட்டு. மிக்ஜாம் புயலில் அனைத்து அமைச்சர்களும் களத்தில் நின்றனர். பிரதமர் வந்து பார்த்தாரா. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் திமுக அரசு 6 ஆயிரம் ரூபாய் வழங்கியது. ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.  பெண்கள் கல்லூரியில் படிக்கக் கல்வி ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மாதாமாதம் 11 ஆயிரம் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. காலை உணவுத் திட்டம் இந்தியாவில் முதன்முறையாகக் கொண்டு வந்தவர் நமது முதலமைச்சர். ஈரோடு மாவட்டத்தில் 56 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன் பெறுகிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் மாதாமாதம் 4 இலட்சம் மகளிர் பயன்பெறுகிறார்கள். இன்னும் 4 மாதத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.

பிரதமரிடம் கேளுங்கள். ஜிஎஸ்டி வரி வழிப்பறி. கொள்ளை அடிக்கிறார்கள். ஒன்றிய அரசுக்கு 1 ரூபாய் கொடுத்தால் திருப்பித் தருவது வெறும் 29 பைசா உத்தபிரதேச மாநிலம் 1 ரூபாய் கொடுத்தால் 3 ரூபாய் பீகாருக்கு 7 ரூபாய் நமக்கு 29 பைசா. எவன் அப்பன் வீட்டு காசு. யாருக்கு கொடுக்கிறார்கள்.
போனதடவை கோப்பேக் மோடி. இந்த முறை கெட் அவுட் மோடி. வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்து மருத்துவம் பார்க்கிறார்கள். நீட் தேர்வை அம்மா இருக்கும் வரை கொண்டு வரவில்லை. அதற்குப் பிறகு வந்த அடிமை அரசு நீட் தேர்வுக்கு அனுமதி அளித்தது. இதனால் அனிதா உள்ளிட்ட பலரை இழந்துள்ளோம். இந்த நீட் தேர்வு நமக்குத் தேவையா. இதற்குச் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்களிப்போம் என ராகுல் காந்தி கூறி உள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டும் மோடி தமிழகத்திற்கு வருகிறார். பாதம் தாங்கிப் பழனிச்சாமி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் எனப் பேசினார். நான் அங்குச் சென்று பார்த்தபோது ஒரு செங்கல் மட்டுமே இருந்தது.

இதைக் கூறினால் பழனிச்சாமிக்கு ஏன் கோபம் வருகிறது.  அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே கள்ள உறவு.  மோடி அரசு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஒரு சீட்டு கூட வெல்லாது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. திமுக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். ஜுன் 3 ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாள். அதற்கு அடுத்த நாள் வாக்கு எண்ணிக்கையின்போது 40 தொகுதிகளில் நீலகிரி தொகுதியில் அண்ணன் ஆ.ராசா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துக் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக அளிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளரிடமும் உதயசூரியனுக்கு வாக்களிக்கப் பாசத்தோடு உரிமையோடு தலைவரின் மகனாகக் கலைஞரின் பேரனாகக் கேட்கிறேன். அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களித்துப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *