கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டம்!

Advertisements

மதுரை:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதற்குக் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அரிட்டாப்பட்டி ஏற்கனவே பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.

எனவே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முத்து வேல்பட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், செட்டி யார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மேலூர் பகுதி விவசாயிகள், வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சுரங்க ஏல திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். தொன்மையான தொல்லியல் சின்னங்கள்-பல்லுயிர் சூழல்கள் அடங்கியுள்ள மதுரை மாவட்டத்தைப் பாரம்பரிய தமிழ் பண்பாட்டு மண்டலமாக அறிவித்திட வேண்டும்.

முல்லை பெரியாறு பாசன பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கிட சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்திக் கோஷமிட்டனர். போராட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *