Lok Sabha Election 2024: 7 தொகுதிகளை ஒதுக்க முடிவு.. அ.தி.மு.க, பா.ம.க. கூட்டணி உடன்பாடு?

Advertisements

அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை: பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எந்தக் கூட்டணியில் சேரப்போகிறது? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. கூட்டணி தொடர்பாகப் பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பா.ம.க. ரகசியமாகப் பேசி வந்தது.

இதில் எந்த அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் கூட்டணி தொடர்பாகப் பா.ம.க. இறுதி முடிவை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று பா.ம.க. அதிரடி முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளைக் கேட்ட நிலையில் 7 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. சம்மதித்திருப்பதாகவும், இதனால் 2 கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து சேலம் சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.

பா.ம.க. நிர்வாகிகள் இன்று மாலை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவினரை சந்தித்து பேச இருப்பதாகவும் அப்போது நடைபெறும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

அதே நேரத்தில் தே.மு. தி.க. நிர்வாகிகளும் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை இன்று மாலையில் சந்தித்து 3-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *