பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 18,000 சிறப்பு ரயில்கள் இயக்கம் -அஸ்வினி வைஷ்ணவ்.!

அடுத்த ஐம்பதாண்டுக்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டு ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதாகவும், இந்த ஆண்டு விழாக்காலத்தில் 18 ஆயிரம் சிறப்பு ரயில்களை இயக்குவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும்போது அடுத்த ஐம்பதாண்டுக்காலத் தேவையைக் கருத்திற்கொண்டு வசதிகள் செய்யப்படுவதாகக் கூறினார்.

இராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் ரயில் நிலையங்கள் அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கட்டடக்கலை ஆகியவற்றைக் காட்டும் வகையில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நாடு முழுவதும் 1300 நிலையங்களை மறுசீரமைக்கத் திட்டமிட்டதில் இதுவரை 400 நிலையங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தீபாவளி, சாத் பூஜை ஆகிய விழாக்காலங்களில் பயணியரின் வசதிக்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகக் கூறினார். கடந்த ஆண்டு துர்க்கை பூஜை, தீபாவளி, சாத் ஆகிய விழாக்காலங்களில் 12 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டில் 18 ஆயிரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

பயணிகள் அதிகம் கூடும் பெரிய ரயில் நிலையங்களில் கூடுதலாக இடவசதி, குடிநீர், கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். பயணிகளுக்காகக் கூடுதல் இடவசதி செய்துள்ள இடத்திலும் பயணச்சீட்டு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மக்களின் தேவை மிக அதிகமாகவே உள்ளதாகவும், இருப்பினும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் சிறப்பான சேவை வழங்கத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *