அன்பில் மகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

திமுக நிர்வாகிகளான அரசகுமார், முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  அடுத்தகட்டமாக அன்பில் மகேஷும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருப்பதோடு, பள்ளிக்கல்வித் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த விவாதத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த 11 நாட்களாக புழல் சிறையில் இருந்து வரும் அன்பில் மகேஷின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அன்பில் மகேஷ் தரப்பும், காவல்துறை தரப்பும் முன்வைத்த வாதங்கள் வழக்கின் அடுத்தகட்ட நகர்வில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அரசகுமார் பணம் வசூலித்ததாக முதலில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் தன்மையையே காவல்துறையினர் பின்னர் மாற்றியுள்ளதாக அன்பில் மகேஷ் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. ஊழல் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கும்போது, திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பொய்யான தகவல்களைக் கூறியே அரசகுமார் ரூ.100 கோடி பணத்தை வசூலித்துள்ளதாகவும், அந்தப் பணத்திற்கும் அன்பில் மகேஷுக்கும் தொடர்பு இல்லை என்றும் அவரது தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த வழக்கின் விசாரணைக்காக காவல்துறையினர் கேட்ட அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையின்போது கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்துள்ள நிலையில், அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அவரது தரப்பு நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.

ஆனால், அன்பில் மகேஷ் தரப்பின் வாதங்களை காவல்துறை தரப்பு ஏற்கவில்லை. அவரிடம் நடத்தப்பட்ட மூன்று நாள் போலீஸ் காவல் விசாரணையில் பல புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ரூ.100 கோடி லஞ்சப் புகாராகத் தொடங்கிய இந்த விவகாரத்தில், இதுவரை ரூ.400 கோடி வரை வசூல் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்பில் மகேஷிடம் இன்னும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும், பல்வேறு விவரங்களைச் சரிபார்க்க வேண்டியிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மற்றொரு முக்கிய அம்சமாக, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தின் கால அளவு மாற்றப்பட்ட விவகாரத்தையும் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

வழக்கமாக 20 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வந்த அங்கீகாரம், 3 ஆண்டுகளாக மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டதாகவும், இதன் காரணமாக நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளைப் பெறுவதற்காகத் தனியார் பள்ளிகள் பணம் கொடுத்துள்ளதாகவும் போலீசார் வாதிட்டுள்ளனர்.

இதனால், இது வெறும் தனிநபர் பண வசூல் விவகாரம் மட்டுமல்லாமல், பள்ளிக்கல்வித் துறையின் அரசாணைகள், நிர்வாக முடிவுகள், அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு இடையிலான தொடர்புகள் எனப் பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டிய வழக்காக மாறியுள்ளது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். இதனால், உடனடியாக ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அன்பில் மகேஷுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், ஜாமீன் தொடர்பான இறுதி முடிவு நவம்பர் 10-ம் தேதிதான் வெளியாகவுள்ளது. இதனால், தீபாவளியைப் புழல் சிறையிலேயே கொண்டாட வேண்டிய அவல நிலை அன்பில் மகேஷுக்கு ஏற்பட்டுள்ளது.ஒருபுறம், அரசகுமார் தனிப்பட்ட முறையில் பணம் வசூலித்ததாகவும், அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் அன்பில் மகேஷ் தரப்பு வாதிடுகிறது. மறுபுறம், ரூ.400 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் மேலும் பல விவரங்களை விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் காவல்துறை கூறுகிறது.

ரூ.100 கோடி லஞ்சப் புகாரில் தொடங்கிய இந்த வழக்கு, ரூ.400 கோடி வசூல் என்ற காவல்துறையின் குற்றச்சாட்டால் மேலும் பரபரப்பாகியுள்ளது. ஆக அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது சிறையிலேயே மீண்டும் கலி திண்பாரா போன்ற கேள்விகளுக்கு    நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் நீதிமன்றத் தீர்ப்பை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *