தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பாஜக கூட்டு களவாணித்தனம் செய்திருப்பதாகப் பிருந்தா காரத் விமர்சனம் செய்துள்ளார்.
இப்படியும் நடக்குமா என்று மலைக்கிற அளவுக்கு, பாஜவின் பத்தாண்டு ஆட்சியின் அவலங்கள் கொத்துக் கொத்தாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உச்ச அதிகாரத்தில் இருந்தால் எப்படியெல்லாம் விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டலாம் என்பதற்கு சாட்சியாக, முன்னுதாரணமாகச் சொல்லும் அளவுக்கு இந்த அவலங்கள் பாஜவின் நிஜ முகத்தை இப்போது தோலுரித்து காட்டிக் கொண்டிருக்கின்றன.
அதிலும், தேர்தல் பத்திர விவகாரம் பெரும் பரபரப்பையும், பதைபதைப்பையும் ஏற்படுத்தி விட்டது. எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வழங்கியது என்பதை எளிதில் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு விவரங்களைத் தனித்தனியாக எஸ்பிஐ, தேர்தல் ஆணையம் வெளியிட்டன.
இதை ஆய்வு செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள்மூலம் மிரட்டப்பட்ட நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்கள்மூலம் பாஜவுக்கு நன்கொடை கொடுத்ததுதான் அது. ஏற்கெனவே, அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டில் சிக்கியிருந்த 30 நிறுவனங்கள் பாஜவுக்கு ரூ.355 கோடி கொடுத்த விவரம் கடந்த மாதமே வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, 41 நிறுவனங்கள் 18 பத்திரங்கள் மூலமாக மட்டும் மொத்தம் ரூ.2,010.5 கோடியைப் பாஜவுக்கு அள்ளிக் கொடுத்துள்ளன.
இந்தநிலையில் தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பாஜக கூட்டு களவாணித்தனம் செய்திருப்பதாகப் பிருந்தா காரத் விமர்சனம் செய்துள்ளார். நீ எனக்கு உதவு, நான் உங்களுக்கு உதவுகிறேன் எனத் தொழில் அதிபர்களுடன் சேர்ந்து பாஜக கூட்டு களவாணி வேலை பார்த்துள்ளது. பத்தாண்டு கால மோடி ஆட்சியில் எரிபொருட்கள்மீதான வரிகளில் ரூ.28 லட்சம் கோடியை மக்களிடம் பிக்பாக்கெட் அடித்துள்ளனர் என்று அவர் கூறினார்.

