
சென்னை: சுட்டெரிக்கும் வெயில், லோக்சபா தேர்தல் காரணமாக, ‘டாஸ்மாக்’ கடைகளில், கடந்த மாதம், 4,475 கோடி ரூபாய் மதிப்பிலான, 87 லட்சம் பெட்டி மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
டாஸ்மாக் கடைகளில் தினமும் சராசரியாக, 60,000 பெட்டி பீர்; 1.80லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின்றன. கடந்த மார்ச் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மது வகையைவிட, பீர் வாங்க ‘குடி’ மகன்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மார்ச், 16ல் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியான பின், வேட்புமனு தாக்கல், பிரசாரம் போன்றவற்றுக்கு தொண்டர்களை அழைத்துச் செல்கின்றனர். அவர்களுக்குச் செலவுக்குப் பணம், சாப்பாடு உடன், மது பாட்டிலும் வழங்கப்படுகிறது.
இதனால், மார்ச்சில் பீர்விற்பனை, 32.72 லட்சம் பெட்டிகளாக அதிகரித்தது. இது பிப்ரவரியில், 26.93 லட்சம் பெட்டிகளாகவும்; ஜனவரியில், 24.40 லட்சம் பெட்டிகளாகவும் இருந்தது.
இதேபோல மார்ச்சில் மது வகை விற்பனையும், 55.07 லட்சம் பெட்டிகளாக அதிகரித்துள்ளது. இது பிப்ரவரியில், 47.34 லட்சம் பெட்டி; ஜனவரியில், 57 லட்சம் பெட்டிகளாகவும் இருந்தது.
மொத்தம், 12 பாட்டில்களை உடைய ஒரு பெட்டி பீர் விலை சராசரியாக, 1,900 ரூபாயாகவும்; 48 குவார்ட்டர் பாட்டில்கள் உள்ள ஒரு பெட்டி மது வகை விலை, 7,000 ரூபாயாகவும் உள்ளது.
அதன்படி கணக்கிட்டால், மார்ச் மாதத்தில், 621 கோடி ரூபாய்க்கு பீரும்; 3,854 கோடி ரூபாய்க்கு மது வகைகளும் விற்பனையாகி உள்ளன. பிப்ரவரியில் பீர் விற்பனை, 511 கோடி ரூபாயாகவும்; மது விற்பனை, 3,313 கோடி ரூபாயாகவும் இருந்தது.



