Lok Sabha Election 2024: 2,025-ல், நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு; தேர்தல் அறிக்கையில் அகிலேஷ் யாதவ் உறுதி!

Advertisements

லக்னோ: நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வருகிற 2025 ஆம் ஆண்டு நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கையில் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதி அளித்திருக்கிறார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகிறது.

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கை லக்னோவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

20 பக்கங்களை கொண்ட இந்த தேர்தல் அறிக்கை இந்த முறை “பிடிஏ அரசு”அமைவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது பிச்டே (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) தலித்(தாழ்த்தப்பட்ட வகுப்பினர்) மற்றும் அல் பசங்கியாக் (சிறுபான்மையோர்) ஆகியோருக்கான அரசு என்பது அதன் விளக்கம்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டபின் அதன் முக்கிய அம்சங்கள் குறித்து செய்தியாளர்களுக்கு அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

” *மத்தியில் இந்தியா கூட்டணி அரசு அமைந்ததும் 2025 ஆம் ஆண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அனைத்து அரசு காலி பணியிடங்களும் இட ஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்படும்.

*அக்னிபாத் ராணுவ தேர்வு முறை நீக்கப்பட்டு ஏற்கனவே அமலிலிருந்த வழக்கமான முறையில் ராணுவ வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

*மீண்டும் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்த படும். தனியார் துறையில் உள்ள நிறுவனங்களும் இதில் பயனடைய வாய்ப்பு அளிக்கப்படும். 2029 ஆம் ஆண்டுக்குள் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.

*விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கப்படும். அனைத்து விவசாய கண்களும் தள்ளுபடி செய்யப்படும். இலவச நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பதுடன் விவசாயிகளுக்கான ஆணையம் அமைக்கப்படும்.

* நிலமற்ற மற்றும் சிறு குறு விவசாயிகள் அனைவருக்கும் மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன்.

*பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழுக்க கடுமையான நடவடிக்கை. ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தொகுதி மறு வரையறைக்கு காத்திராமல் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு.

*இலவச கல்விக்கான சட்டபூர்வ உரிமை. பட்ஜெட்டில்கல்விக்கான நிதி ஒதுக்கீடு 3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக அதிகரிக்கப்படும். அனைவருக்கும் தரமான சுகாதார வசதி கிடைப்பதற்கான சட்டபூர்வ உரிமை மற்றும் டிஜிட்டல் பிரிவை நீக்குவது உறுதி செய்யப்படும்.

*இலவச ரேசனின் ஒரு பகுதியாக மக்களுக்கு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு வழங்கப்படும். ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தல 500 ரூபாய் மதிப்புள்ள மொபைல் டேட்டா இலவசமாக வழங்கப்படும்.

*தனியார் மயமாக்கல் மற்றும் மத்திய, மாநில, பொதுத்துறை பிரிவுகளில் ஆட்குறைப்பு செய்வதை நிறுத்துவது உள்ளிட்ட மற்றும் பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 62 இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் போட்டியிடுகிறது. பதோகி தொகுதி திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *