வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
சென்னை, தரமணியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார், அவரது மனைவி, இரண்டு வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக உயிர்மாய்க்கப்பட்டனர்.
இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத்தளத்தில், சில நாட்களுக்கு முன் தான் திருத்தணியில் மகாராஷ்டிரா மாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம், இந்திய அளவில் பேரலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டில் ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக உயிர்மாய்க்கப்பட்டச் சம்பவம் மிகவும் கண்டனக் குறியது. பின்னர், வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது என்று கூறினார்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், யாருக்கும் பாதுகாப்பற்ற, மோசமான ஆட்சியை நடத்தி வரும் விடியா திமுக அரசிற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதைப் போல், வாய்ச்சவடால் பேசும் பொம்மை முதலமைச்சர் இந்தச் சம்பவத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறார் என கேள்வி எழுப்பினார்.
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

