Lok Sabha Election 2024: 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!

கடலூரில் மக்களவைத் தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி நடந்த விழிப்புணர்வு பேரணியை – மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தல் 2024-க்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 16) அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.

இந்தநிலையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மக்களவைத் தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது. இப்பேரணியை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பேரணியில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் பொது மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நகர அரங்கில் தொடங்கிய இப்பேரணி கடலூரின் முக்கிய சாலை வழியாகக் கடலூர் உழவர் சந்தை அருகே முடிவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *