
2026-ல் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவோம், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவு செய்ய அவருக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, திமுகவை வீழ்த்துவதற்கு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு முழுமனதுடன் ஒப்புதல் அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஈபிஎஸ்-க்கு இருப்பதாக பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டணியின் நோக்கத்தை புரிந்துக் கொண்டு, அதன் தலைமையை ஏற்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற முடியும் என்றும் அதிமுக குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார் என்று சூசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , முதலமைச்சர் வேட்பாளர் ஈபிஎஸ் தான் என்பதும் மறைமுகமாக திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மெட்ரோ திட்ட ஒப்புதலுக்கான புள்ளி விவரங்களை முறையாக அனுப்பாத திமுக அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை வரவேற்பதாக கூறியுள்ள அதிமுக, முறைகேடான வாக்காளர் பட்டியல் மற்றும் தில்லு முல்லுகளை நீக்கி, தகுதியான வாக்காளர்களை கொண்ட பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.



