உங்கள் பணம், உங்கள் உரிமை – பிரதமர் மக்களுக்கு அறிவுரை.!

Advertisements

உங்கள் பணம், உங்கள் உரிமைத் திட்டத்தின்படி இரண்டாயிரம் கோடி ரூபாய் திருப்பியளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கோரப்படாத பணத்தைக் கோரிப் பெற்றுக்கொள்ளும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதியங்கள் ஆகியவற்றில் கணக்குத் தொடங்கிய வாடிக்கையாளர்கள் இடையில் நிறுத்தி விடுவது, திருப்பி எடுக்காமல் கைவிட்டு விடுவது ஆகியவற்றால் அந்தப் பணம் அந்தந்த நிறுவனங்களில் நின்றுவிடும்.

இப்படிக் கோடிக்கணக்கானோரின் சிறு தொகை முதல் பெருந்தொகை வரை வங்கி, காப்பீடு, பரஸ்பர நிதியங்கள் ஆகியவற்றில் குவிந்துள்ளன.

இதுவரை உரிமை கோரப்படாத இந்தத் தொகையை அதற்குரியவர்கள் தக்க அடையாளங்களைக் காட்டித் திரும்பப் பெற, உங்கள் பணம், உங்கள் உரிமை என்கிற திட்டம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது.

இது குறித்து,  எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், கோரப்படாமல் இருந்த நிதிச் சொத்துக்களைத் திரும்பக் கொடுக்கும் திட்டத்தில் இதுவரை இரண்டாயிரம் கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வங்கிகளில் 78 ஆயிரம் கோடி ரூபாயும், காப்பீட்டு நிறுவனங்களில் 14 ஆயிரம் கோடி ரூபாயும், பரஸ்பர நிதியங்களில் மூவாயிரம் கோடி ரூபாயும், பங்காதாயமாக ஒன்பதாயிரம் கோடி ரூபாயும் கோரப்படாத நிதியாகக் குவிந்துள்ளது.

இந்தப் பணம் எண்ணற்ற குடும்பங்கள் பாடுபட்டு உழைத்துச் சேமித்த, முதலீடு செய்த பணமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணத்தைத் திரும்பப் பெற உதவும் வகையில் ரிசர்வ் வங்கி உத்காம் தளத்தையும், காப்பீட்டு ஒழுங்காற்று வாரியம் பீமா பரோசா தளத்தையும், செபி மித்ரா தளத்தையும், நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் இப்பா தளத்தையும் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தளங்களை அணுகி இதுவரை மறந்திருந்த தங்கள் நிதிச் சொத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளப் பொதுமக்களுக்கு புதிய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *