அரசு பணிக்கான ஆணை வழங்குவதற்காக கரூர் வந்தடைந்தார் விஜய்.!

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்குவதற்காக கரூர் வந்தடைந்தார் விஜய்.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான ஆணை வழங்குவதற்காக, தமிழக முதலமைச்சர் விஜய் இன்று கரூருக்குச் செல்கிறார். தொடர்ந்து அவர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். முன்னதாக, அவர் இன்று காலை 10.30 மணிக்குத் தனி விமானம் மூலம் திருச்சி செல்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு கரூர் செல்கிறார். அப்போது வழிநெடுகிலும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அவர் கரூர்- சேலம் நெடுஞ்சாலையில் உள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்ற உள்ளார்.

இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு, அரசு சுற்றுலா மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்க உள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இதில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பயனாளிகளுக்கு, அரசு பணிக்கான ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். முதலமைச்சரின் வருகையையொட்டி, சாலை முழுவதும் காவல்துறையினர் பலத்தப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *