Leo FDFS: அனுமதி இல்லை!

‘லியோ’ படத்துக்குக் காலைக் காட்சிக்கு அனுமதி இல்லை!

‘லியோ’ படத்துக்குக் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லையென உள்துறை செயலாளர் அமுதா கூறியுள்ளார்.

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை நாளை முதல் 24-ந்தேதி வரை காலை 9 மணி முதல் 1.30 மணிவரை 5 காட்சிகள் திரையிடத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆனால், முதல் நாள் ரசிகர்கள் காட்சியாக அதிகாலை 4 மணிக்குத் திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்க வேண்டும். மறுநாள் முதல் 24-ந்தேதி வரை காலை 7 மணி முதல் 1.30 மணிவரை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் படத்தைத் தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘லியோ’ படத்தை அதிகாலை 4 மணிக்குத் திரையிட அனுமதிக்க முடியாது என்றும், காலை 7 மணிக்குத் திரையிட அனுமதி கேட்கும் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில், லியோ படத்துக்குக் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை. அரசாணையின்படி நாளை முதல் 25-ம் தேதிவரை லியோ படத்துக்குக் காலை 9 மணி காட்சிகளுக்கே அனுமதியென உள்துறை செயலாளர் அமுதா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *