ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தனுஷ் நடித்த ‘3′ கவுதம் ,கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.
இந்த நிலையில் இன்று ‘லால் சலாம்’ படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “உங்களை வைத்து ஒரு படம் இயக்குவது ஓர் அதிசயம். நீங்கள் ஒரு மேஜிக் அப்பா” என்று கூறியுள்ளார். இத்துடன் ரஜினி தொடர்பாக படப்பிடிப்பு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்திலும் ரஜினி நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார்.