Kumara Kottam Murugan Temple: பந்தியில் வெறும் வாழைஇலை.. கடுப்பான பொது மக்கள்!

Advertisements

காஞ்சிபுரத்தில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்குகின்ற குமாரகோட்டம் முருகன் கோவிலில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொது மக்களுக்கு உணவு பரிமாறி மக்களோடு மக்களாக உடன் அமர்ந்து உணவருந்தினார்.

முதல் பந்தி முடிவுற்று இரண்வாது பந்தியிலேயே உணவு தீர்ந்ததால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் பந்தியில் வெறும் வாழையிலை மட்டும் போட்டு விட்டுக் குடிநீர், சாப்பாடு கூடப் பரிமாறாமல் காத்துக்கிடந்ததால் உணவருந்த வந்த பொது மக்கள் கடும் கோபமடைந்தனர்.

காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதி பகுதியில் உள்ள கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி முருகன் திருக்கோவிலில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொதுமக்களுக்குத் தனது கையால் உணவு பரிமாறிச் சமபந்தி விருந்தினை துவக்கி வைத்து, அதன் பின் முதல் பந்தியில் மக்களோடு மக்களாக  உடன் அமர்ந்து உணவருந்தினார்.மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, மாவட்ட ஊராட்சிக் குழுத்துணை தலைவர் நித்யா சுகுமார் ஆகியோரும் மக்களுடன் அமர்ந்து சமபந்தி உண்டு மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது பந்தியில் பொதுமக்கள் அமர வைக்கப்பட்டு, நீண்ட நேரம் ஆகியும் உணவு வழங்காததால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சமபந்தியெனக் கூறிவிட்டு முதல் பந்தியில் அரசு அலுவலர்கள் உணவு அருந்தியபோது அனைவருக்கும் உணவு கிடைத்தது, ஆனால் இரண்டாவது பந்தியில் பொதுமக்கள் அமர வைக்கப்பட்டு நீண்ட நேரம் ஆகியும் உணவு பரிமாறாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

குறிப்பாகப் பந்தியில் ஒருபுறம் பொது மக்கள் சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருந்த வேளையில், மறுபுறம் வெறும் வாழையிலை மட்டும் போட்டு விட்டுக் குடிநீர், சாப்பாடு கூடப் பரிமாறாமல் பல மணி நேரமாகக் காத்துக்கிடந்ததால் உணவருந்த வந்த பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி மனம் நொந்து போயினர்.இதன் பின்பு நீண்ட நேரம் கழித்து பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

பசியோடு உணவருந்த வந்த பொதுமக்களுக்குச் சாப்பாடு போடாமல் பல மணி நேரமாகக் காக்க வைத்தச் செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *