
இந்நிலையில் இன்று கொங்கு மண்டல மாவட்டங்களான கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெற உள்ளது. மாலை அமர்வில் கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் பகுதிகளும் இடம்பெறுகின்றன. கோவை உள்பட கொங்கு மண்டல வேட்பாளர் தேர்வில் செந்தில் பாலாஜியின் பங்கு முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் யார் யார் போட்டியிட வாய்ப்பு என கட்சி வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. சிங்காநல்லூர் தொகுதியில் தற்போதைய மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. கோவை தெற்கு தொகுதி கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்கப்படலாம்;
கவுண்டம்பாளையம் தொகுதியில் ஆர். கிருஷ்ணன், கிணத்துக்கடவில் குறிச்சி பிரபாகரன், பொள்ளாச்சியில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அல்லது டாக்டர் வரதராஜன் ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர். வால்பாறை (தனி) தொகுதி கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. சூலூர் தொகுதி திமுக அல்லது கூட்டணி கட்சிக்கிடையே தீர்மானிக்கப்பட உள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதி திமுகவின் டி.ஆர். சண்முகசுந்தரம் அல்லது காங்கிரசுக்கு செல்லலாம் என கூறப்படுகிறது.
இதனால் கோவை மற்றும் கொங்கு மண்டலத்தில் திமுக வேட்பாளர் தேர்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது கட்சி வட்டாரங்களில் தீவிர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


