தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி புகார்தாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்தது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சைக்கு உள்ளாகி அதற்கு அவர் மன்னிப்பு கோரிய நிலையில், அடுத்த நெருக்கடியாக பழைய வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவத்தை அடுத்து, தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதைக் கண்டித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார் ஆதவ் அர்ஜுனா. இலங்கை, நேபாளத்தைப் போல் புரட்சி ஏற்படும் என பதிவிட்ட தவெக கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது, வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் போராட்டங்களில் இறங்கக் கூடும் என எச்சரிக்கும் வகையில் மட்டுமே இந்த கருத்து அமைந்துள்ளதாகவும், வன்முறையையோ, வெறுப்பையோ தூண்டும் வகையில் இல்லை எனக் கூறி, கடந்த ஆண்டு நவம்பரில் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி, புகார்தாரரான எல்.ஐ.சி ஏஜெண்ட் சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன் தரப்பை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதாக அவர் மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த மனு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவெடுக்க, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, மனு விசாரணைக்கு உகந்ததுதான் எனக் கூறி, மனுவை எண்ணிட்டு, பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் சூழலில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார் ஆதவ் அர்ஜுனா. அதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. ரஜினி ரசிகர்கள், திமுக, அதிமுக, பாஜக தலைவர்கள் பலரும் ஆதவ் அர்ஜுனா பேச்சைக் கண்டித்திருந்தனர்.
இதற்கு நடிகர் ரஜினிகாந்த் “காலம் பேசாது.. காத்திருந்து பதில் சொல்லும்” என பதில் கொடுத்த நிலையில், நேற்று இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜுனா. இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்திருப்பது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..


