
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தீப்பிடித்த நிலையில் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் திணறி வருகின்றனர்.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் அடுக்கம் செல்லும் வழியில் சாமக்காட்டுப் பள்ளம் அருகே உள்ள தனியார் நிலத்தில் திடீரெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
சாய்வான மலைப் பகுதி என்பதாலும், காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதாலும் தீ மளமளவெனப் பரவியது. தனியார் தோட்டத்தின் அருகிலேயே காட்டுப் பகுதி இருப்பதால் பற்றி எரிந்து வரும் தீயானது அருகில் உள்ள காட்டுக்குப் பரவும் சூழல் உள்ளது.
இது குறித்துக் கொடைக்கானல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உயரமான மலைப் பகுதி என்பதால் தீ எரிந்து வரும் பகுதிக்கு வீரர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். காட்டுத்தீயால் கொடைக்கானலில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளது.
