
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் நான்காம் சுற்றுக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சொந்த நாட்டவரான மியோமிர் கெக்மனோவிக்கை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆறுக்கு மூன்று, ஆறுக்குப் பூச்சியம், ஆறுக்கு நான்கு என்கிற கணக்கில் நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்றுக் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அந்தச் சுற்றில் அவர் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிர்கொள்ள இருக்கிறார். இந்த வெற்றி மூலம் அவர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நூறாவது வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற இரண்டாவது இன்னிங்சில் 608 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. இரண்டாம் இன்னிங்சில் இந்திய அணி 427 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி வெற்றிபெற இரண்டாவது இன்னிங்சில் 608 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று ஒருநாள் ஆட்டம் மட்டும் எஞ்சியுள்ள நிலையில் அந்த அணி மேலும் 536 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது.
