
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மலிவு விலை உணவகம் விரைவில் அமைக்கப்படும் என்றும் கோயம்பேட்டில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கிளாம்பாக்கத்தில் கடை ஒதுக்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதுஎன்று அமைச்சர் சேகர்பாபுதெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில், புதிய காவல் நிலையம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேருந்து நிலையத்தில் காவல் கட்டிடம் 14.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ளது. இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இன்றுடன் 36-நாள் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் சரியான திட்டமிடல் இல்லை, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது 14 கோடியே 35 லட்சம் செலவில் காவல் நிலைய கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த காவல் நிலையம் புதிய முறையில் அமைக்கப்பட உள்ளது காவலர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்காகக் கட்டப்படும் பேருந்து நிறுத்தம் பணிகள் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும்.
கிளாம்பாக்கத்தில் மிக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும், அங்கு விலை குறைவான தரமான உணவுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், கோயம்பேட்டில் 32-கடைகள் பயன்பாட்டில் இருந்தது. அந்தக் கடைகளுக்கு மொத்தமாக உரிமையாளர்கள் 11-பேர் தான் இருந்தனர். அவர்களுக்குக் கிளாம்பாக்கத்தில் மாற்று இடமாகக் கடைகளைச் சலுகை விலைக்கு அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆம்னி பேருந்துகள் சென்னை செல்வதற்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்பக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நீதிமன்றத்தில் எந்த முடிவு எடுக்கப்படுகிறதோ? அதன் பிறகு துறை ரீதியாக முடிவு செய்யப்படும் எனவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 35-நாட்களுக்குள் 90-சதவீதம் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.



