
வங்காள தேச அரசு ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்காள தேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இதை தொடர்ந்து, வங்காள தேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றது. புதிய அரசு அமைந்ததும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உயிர்மாய்க்கம் செயல், ஊழல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த குற்றச்சாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார்.
இதை யடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்து, மரண தண்டனை அளித்து உத்தரவிட்டனர். இதற்கிடையே இந்தியா- வங்கதேச இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்திய அரசை வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பாக வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவித்த தீர்ப்பை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது என்றும் வங்கதேச மக்களின் நலன்களுக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து, அமைதி, ஜனநாயகம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை வலியுறுத்தி இந்தியா ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது.




