
புதுச்சேரியில் நடிகர் விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பு விஜயை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்த நிலையில் தனது வழக்கமான பாணியில் படப்பிடிப்பு வாகனத்தின் மேலே ஏறி செல்பி எடுத்தார் அப்பொழுது அவர் மீது ரசிகர்கள் தூக்கி எறிந்த மாலையை கழுத்தில் போட்டுக் கொண்டு வழக்கமான பாணியில் முத்தமிட்டார்.
புதுச்சேரி முதலியார்பேட்டை கடலூர் சாலையில் அமைந்துள்ள ஏஎப்டி பஞ்சாலையில் நடிகர் விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களாக ரகசியமாக நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் விஜய் முக்கிய காட்சியில் நடிப்பதற்காக வந்துள்ளதாக தகவல் புதுச்சேரி முழுவதும் பரவியது இதனால் நடிகர் விஜய்யை காண ஏ எஃப் டி பஞ்சாலை வாயிலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அறிந்த நடிகர் விஜய் படப்பிடிப்பு வாகனத்தின் மீது ஏறி ரசிகர்கள் முன்பு தோன்றினார். அப்பொழுது அவர் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது விஜய் மீது ரசிகர்கள் மலர்களை தூவிய நிலையில் மேலும் சில ரசிகர்கள் அவர் மீது மாலையை தூக்கி எறிந்தனர்.
கீழே விழுந்த மாலையை எடுத்து தன் கழுத்தில் போட்டுக் கொண்டு அவரது வழக்கமான பாணியில் செல்பி எடுத்து ரசிகர்களுக்கு முத்தமிட்டார் பின்பு கழுத்தில் போட்ட மாலைகளை மீண்டும் ரசிகர்கள் மீது வீசி விட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றார். நடிகர் விஜயின் புதிய படப்பிடிப்பு காரணமாக புதுச்சேரி கடலூர் சாலையில் ரசிகர்களின் கூட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய பிறகு முதன்முறையாக ரசிகர்கள் மத்தியில் தோன்றியது அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


