கேரளாவில் ‘கை’ ஓங்கியது….! முதலமைச்சரானார் வி.டி.சதீசன்…..!

Advertisements

கேரள மாநிலத்தின் புதிய முதலமைச்சராகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.டி.சதீசன் இன்று (மே 18) காலை 10 மணிக்கு முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில், அவருக்கு மாநில ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவியேற்புப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

 

சமீபத்தில் (மே 4) வெளியான கேரள சட்டசபை தேர்தல் முடிவுகளில், மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) 102 இடங்களைக் கைப்பற்றி அசுர விஸ்வரூபம் எடுத்தது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டுமே 63 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (LDF) கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. இத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கூட்டணி 35 இடங்களையும், பாஜக 3 இடங்களையும் மட்டுமே கைப்பற்றின.

ஆட்சியைப் பிடித்த போதிலும், முதலமைச்சர் நாற்காலிக்குக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன் ஆகிய மூவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதனால் முதலமைச்சர் யார் என்பதில் 10 நாட்கள் நீடித்த உச்சகட்ட இழுபறிக்குப் பின், காங்கிரஸ் மேலிடம் வி.டி.சதீசனை இறுதி செய்தது. இதைத்தொடர்ந்து அவர் ஆளுநரைச் சந்தித்து எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட சுமார் 1 லட்சம் பேர் வரை திரண்டு வந்து பங்கேற்றனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பலர் இவ்விழாவில் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், இப்பதவியேற்பு விழாவின் முக்கிய நிகழ்வாக முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கேரளாவில் காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறியுள்ளது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *