அதிமுகவிலிருந்து செம்மலை அதிரடி விலகல் : இபிஎஸ்-ஐ உலுக்கிய செம்மலையின் கடிதம்….!

Advertisements

அதிமுகவின் மிக மூத்த தலைவரும், முன்னாள் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருமான செம்மலை, கட்சியின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் உட்கட்சி மோதல்கள் தனக்கும், ஆரம்பகாலம் முதல் உழைத்த லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்டிக் காத்த இயக்கத்தின் தற்போதைய அவலநிலையைக் கண்டு, “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா, மனசு நோகுதய்யா” எனத் தனது உள்மனதின் குமுறலை வெளிப்படுத்தியுள்ள அவர், அதிமுகவின் உட்கட்சிச் சண்டையை முன்னணி ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டதாகச் சாடியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தனக்குப் பல வாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்பட்டபோதும் தலைமைக்குக் கட்டுப்பட்டு சுயநலமின்றிப் பணியாற்றியதாகக் குறிப்பிட்டுள்ள செம்மலை, தற்போதைய சுயநல அரசியல் சூழலில் கட்சியில் தொடர்ந்து பயணிக்கத் தனது மனம் இடம் தரவில்லை என்றும், தனக்கு முகவரி தந்த இருபெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம் மன்னிப்புக் கோரி, கனத்த இதயத்தோடு அதிமுகவிலிருந்து விடைபெறுவதாகவும் தனது கடிதத்தில் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் சட்டசபை துணை சபாநாயகர், அமைப்புச் செயலாளர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, சேலம் மாவட்ட அதிமுகவின் அசைக்க முடியாத தூணாக விளங்கிய செம்மலையின் இந்த முடிவு, தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மற்றும் தலைமைத்துவச்  சண்டைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ள தற்போதைய இக்கட்டான அரசியல் சூழ்நிலையில், செம்மலை போன்ற ஒரு மூத்த ஆளுமையின் விலகல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமைக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *