கவின் ஆணவக் கொலை வழக்கு – சுர்ஜித்தின் தாயார் கைது.

திருநேல்வேலி கவின் ஆணவக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாயாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தப் பட்டியலின சமூக இளைஞரான கவின், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரம் காரணமாக உயிர்மாய்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, கவினின் காதலி உடைய சகோதரர் சுர்ஜித்தைப் பாளையங்கோட்டை காவல்துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
மேலும், சுர்ஜித்தின் பெற்றோரும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை சார்பு ஆய்வாளர்களுமான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து சரவணன், அவரது உறவினர் ஜெயபால் மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதில், சரவணன் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறையினர் இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கவின் ஆணவக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரியை, இன்று திருநெல்வேலியில் வைத்துக் காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையிலும், குற்றப்பத்திரிகையில் சுர்ஜித்தின் தாயான காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலும், சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *