
புதுடெல்லி:
2025-26 நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் தொடக்க நாளான இன்று பாராளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரு அவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மத்திய அரசின் முதன்மையான நோக்கம்.
தேசிய கல்வி கொள்கைமூலம் மாணவர்களுக்கு நவீன கல்வி முறை தயாராகி வருகிறது. 8-வது ஊதியக்குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஜனாதிபதி மிகவும் சோர்வடைந்தார். அவரால் பேச முடியவில்லை, பாவம் எனக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி கூறுகையில், ஜனாதிபதியின் உரை போரடிக்கிறது. வேறு கருத்துகள் இல்லையா? திரும்பத் திரும்ப அதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்? என்றார்.
இதற்குப் பதிலளித்துள்ள பா.ஜ.க, இது ஒரு இழிவான கருத்து. சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் இது போன்ற கருத்துக்களை குறிப்பாகக் குடியரசுத் தலைவர்மீது கூறக் கூடாது.
திரௌபதி முர்மு ஒரு ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்தவர், இப்போது அவர் நம் நாட்டின் நம்பர் ஒன் குடிமகனாக இருக்கிறார், அது காங்கிரஸின் ஜமீன்தாரி மனநிலையால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அதனால் தான் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் எனக் குற்றம் சாட்டியது.
