
காரைக்கால் அடுத்த பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு மீன் பிடி துறைமுகம் அமைத்து தர வலியுறுத்தி மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட தங்களது போராட்டம் தீவிரமடையும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தங்கள் பகுதியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வலியுறுத்தியும் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வலியுறுத்தியும் 2009ல் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் ஐஸ் பிளான்ட் உடனடியாக அரசு திறக்க வலியுறுத்தியும் இன்று முதல் பட்டினச்சேரி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொழிலுக்கு செல்லவில்லை என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட தங்களது போராட்டம் தீவிரமடையும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

