
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா (தி.மு.க.) மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி (த.வெ.க.) ஆகிய இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின்னால் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் உள்ளது. சென்னையில் த.வெ.க. பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, தி.மு.க.வின் மேயர் பிரியா சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், திரு.வி.க.நகர் தொகுதி உருது அரசுப் பள்ளி விழாவில் இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது, அவர்களின் அரசியல் மற்றும் அதிகாரப் போட்டி பகிரங்கமாக வெளிப்பட்டது. விழாவை இரு தலைவர்களும் இணைந்து தொடங்கி வைக்க ஏதுவாக இரண்டு ரிப்பன்களும், இரண்டு கத்தரிகளும் தயாராக வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், எம்எல்ஏ பல்லவி திடீரென இரண்டு ரிப்பன்களையும் ஒன்றாகச் சேர்த்து தானே வெட்டி கட்டிடத்தைத் திறந்தார். இது மேயர் பிரியாவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. அடுத்ததாக கட்டிடத்திற்குள் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வின் போது, மேயர் பிரியா முதல் திரியை ஏற்றினார். தனக்கு அடுத்து நின்ற எம்.எல்.ஏ. பல்லவியிடம் மெழுகுவர்த்தியைத் தருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் பல்லவியும் மெழுகுவர்த்தியை வாங்க கையை நீட்டிய போது, பிரியா அவரைத் தாண்டி நின்ற இணை ஆணையர் கற்பகம் என்ற அரசு அதிகாரியிடம் மெழுகுவர்த்தியை நீட்டினார். பொது மேடையில் தனக்கு இழைக்கப்பட்ட இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் எம்.எல்.ஏ. பல்லவி விழாவைப் புறக்கணித்து விறுவிறுவென்று வெளியேறினார்.
பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த அதிகாரிகள், அடுத்ததாக சின்னபாபு தெருவில் நடந்த மற்றொரு பள்ளி விழாவில் இதைச் சரிசெய்ய முயன்றனர். அங்கு மேயர் பிரியா எம்.எல்.ஏ. பல்லவியிடம் மெழுகுவர்த்தியைக் கொடுத்து விளக்கேற்ற அழைத்தார். ஆனால், ஏற்கனவே கோபத்திலும் வருத்தத்திலும் இருந்த பல்லவி அதை ஏற்க மறுத்து, “நீங்களே ஏற்றி விடுங்கள்” என்று கூறினார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் அங்கிருந்த நிகழ்ச்சியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அரசியல் கட்சிகளுக்குள் போட்டி இருப்பது இயல்புதான் என்றாலும், மக்களுக்காக நடக்கும் ஒரு பொதுவான அரசு விழாவில் மக்கள் பிரதிநிதிகள் இப்படி நடந்துகொண்டது முறையல்ல என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. அரசு நெறிமுறைகளைப் பின்பற்றாமல், தங்களின் தனிப்பட்ட அரசியல் கோபத்தையும் அதிகாரத்தையும் பொது மேடையில் காட்டிய இந்த இரு பெண் தலைவர்களின் செயல் அங்கிருந்த பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.



